பிலிம் ரோல் சினிமாவின் மீது ஒரு சிறுவனுக்கு ஏற்படக்கூடிய ஈர்ப்பு அவனை என்னவாக மாற்றுகிறது என்பதே “செலோ ஷோ” எனும் குஜராத் படத்தின் கதையாகும். குஜராத்திலுள்ள சலாலா என்ற பகுதியில் 9 வயது சிறுவன் சமய் வசித்து வருகிறான். இவனது குடும்பத்தின் அடுத்தநாள் வாழ்வாதாரமே ரயில் நிலையத்தில் டீ விற்கும் அவருடைய தந்தையின் வியாபாரத்தை பொறுத்துதான். திடீரென்று ஒருநாள் சிறுவனின் வாழ்வை மாற்றும் ஒரு அதிசயம் ஏற்படுகிறது. இதனிடையில் அவனது தந்தை குடும்பத்துடன் சினிமா பார்க்க அழைத்துச் செல்கிறார். அனைவரும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சிறுவன் மட்டும் பின்னால் ப்ரொஜெக்டரிலிருந்து வரும் ஒளியின் மீது ஈர்படைகிறான்.
இதையடுத்து சிறுவன் சமய் திரையரங்க ஆப்ரேட்டருடன் நண்பராகி தினசரி படங்களை பார்த்து வருகிறான். மேலும் பிலிம்ரோல்களும், ரீல் பெட்டிகளும், ப்ரொஜக்டர் இயக்கமும் என அந்த உலகம் சிறுவனுக்கு ஒரு பள்ளிக்கூடம் போல் ஆகிறது. தான் வளர்ந்து ஒரு சினிமா டிரைக்டராக வேண்டும் என்று அவன் விரும்புகிறான். அதற்கு முன்பாக ஒரு பிலிம்ரோலை திரைப்படமாக ஒளிவீச வைக்கும் வித்தையை புரிந்துகொள்ள சிறுவன் முயல்கிறான். இந்த முயற்சி என்ன ஆகிறது..?, காலம் அவனுக்காக பதுங்கி வைத்திருக்கும் அதிர்ச்சி என்ன என்பது தான் மீதிகதை. இதற்கிடையில் தன்னுடைய வாழ்விலும், நண்பன் வாழ்விலும் நடைபெற்ற உண்மையான சம்பவத்தை “செலோ ஷோ” வாயிலாக சினிமாவாக மாற்றி இருப்பதாக இயக்குனர் பான் நளின் கூறியிருந்தார்.
படத்தின் கதைக்களம் ஒரு சிறுவனுக்கு திரைப்படங்கள் மீதான ஆர்வம் குறித்து என தோன்றும். எனினும் உண்மையில் இயக்குனர் காட்சிப்படுத்தி இருப்பது ஒரு சிறுவனுக்கும், பிலிம் ரோல் சினிமாவுக்கும் இடையேயான பிணைப்பு ஆகும். சமய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவின் ரபாரி மிக இயல்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதாவது, முதன் முறையாக திரையில் வரும் சித்திரங்களை வியப்பது, பிலிம் சுருள்கள், ஒரு மாயாஜாலம் போல் வெண் திரை மீது விரிவதை ஆச்சரியத்துடன் பார்ப்பது, தொடர்ந்து அதன் பின்னால் இருக்கும் மர்மத்தை சிந்திப்பது என பல காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். சமயின் அம்மாவாக வரும் ரிச்சா மீனா, அப்பாவாக வரும் திபன் ராவல், ப்ராஜெக்டரை இயக்கும் பாசிலாக வரும் பாவேஷ் ஸ்ரீமல் போன்றோரின் நடப்பு மிகச் சிறப்பானது ஆகும்.