41 -வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டு போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 20ஆம் தேதி 41வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டி ஆரம்பித்தது. இந்த போட்டியில் தெலுங்கானா, கர்நாடகா, மணிப்பூர், மராட்டியம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அரியானா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம் உட்பட 14 மாநிலங்களை சேர்ந்த 1300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். அதில் குண்டு எறிதல், நீளம், உயரம் தாண்டுதல், நடை ஓட்டம் ,தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் மற்றும் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் என பல்வேறு ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
இந்த போட்டியில் 30 வயது முதல் 90 வயது வரை உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நிறைவு நாள் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயங்கள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் போன்று வயதான வீரர்கள், வீராங்கனைகள் சீறிப்பாய்ந்து இலக்கை அடைந்துள்ளார்கள். அவர்களை பார்வையாளர்களும், சக மாநில வீரர்களும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இதனை அடுத்து தடகள விளையாட்டுப் போட்டிகளும் மாலையில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் தமிழக அணி முதலிடத்தை பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மராட்டியம் இரண்டாவது இடத்தையும், ஆந்திரா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. அவர்களுக்கு சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் கடலூர் அருகில் கீழ் குமாரமங்கலத்தில் வசித்த 77 வயது உடைய சந்திரன் 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தை பிடித்து நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இந்த விழாவில் தேசிய மூத்தோர் தடகள சங்கத் தலைவர் அமரேந்தர் ரெட்டி, செயல் தலைவர் குரு, இணை செயலாளர் ரங்கநாதன் நாயுடு, துணைத் தலைவர் தரம்பால் சர்மா, கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, கடலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.