அகில இந்திய நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய நேதாஜி ராணுவப்படை வாரிசுகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக அகில இந்திய சங்கத்தின் தலைவர், செயலாளர், பொது செயலாளர், மாநிலத் துணைத் தலைவர் மற்றும் மகளிரணி தலைவர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அங்கு பணியில் அமர்த்தப்பட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் அகில இந்திய நேதாஜி ராணுவ படை வாரிசுகள் சங்கத்தினர் சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் மற்றும் தொழில் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.