சிறார்களுக்கு ஆன்லைன் லாட்டரி, சூதாட்ட விளையாட்டுகள் பற்றி தெரிய வந்ததற்கு பெற்றோரே காரணம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
நெல்லையை சேர்ந்த ஐயா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில் ஆன்லைன் லாட்டரிகள் விளையாட்டுகளுக்கு இளம் தலைமுறையினரை ஈர்க்கும் விதமாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, அதற்கான சந்தைகளும் தற்போது காலங்கள் போல அதிகரித்து வருகின்றன. இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் கடன், வறுமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் 18 வயதுக்கு குறைவானவர்கள் ஆன்லைன் லாட்டரி, ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை விளையாடி அதனால் குற்றவாளிகளாக மாறும் சூழலும் அதிகரித்து வருகிறது. ஆகவே 18 வயதிற்கு கீழானவர்கள் ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகளை விளையாட தவிர்க்கும் விதமாக அவர்களின் வயதை உறுதி செய்யும் வகையில் ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு, 18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டுகள் தெரிய வந்தது எப்படி? அதற்கு காரணம் பெற்றோர் தான்.. அரசுக்கு உள்ளதை விட அதிக பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்து விட்டு குழந்தைகள் மீது பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை, அவர்களை கண்காணிப்பதும் இல்லை.
அதன் விளைவாகவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன என கருத்து தெரிவித்து இந்த வழக்கு தொடர்பாக மத்திய தகவல், தகவல் ஒளிபரப்பு துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.