10-ஆ வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிளியூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(15) என்ற மகளும், பாக்யராஜ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பாக்கியலட்சுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசு பொதுத்தேர்வு எழுதிய பாக்கியலட்சுமி நீண்ட நேரமாக செல்போன் உபயோகித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த பாக்கியராஜ் தனது அக்காவை கண்டித்துள்ளார்.
ஆனாலும் பாக்கியலட்சுமி செல்போன் உபயோகப்படுத்துவதை நிறுத்தவில்லை. நேற்று இரவு 8 மணி அளவில் பாக்கியலட்சுமி செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து கோபமடைந்த பாக்யராஜ் அந்த செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்தார். இதில் கோபமடைந்த மாணவி வீட்டிலிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் விவசாய நிலத்திற்கு நடந்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றில் பாக்கியலட்சுமியின் செருப்பு மற்றும் துப்பட்டா மிதந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாக்கியலட்சுமியின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.