தகராறில் சொந்த அக்கா என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு தப்பியோடிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 5வது தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். திருமண மண்டபத்தின் மேலாளரான இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகள் சுவாதிக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் வரன் தேடியுள்ளனர். அப்போது சுவாதி எனக்கு திருமணம் வேண்டாம் என்றும், மேற்படிப்பு படிக்க போவதாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர் சுவாதியை விட்டுவிட்டு அவரது தங்கைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதன் பிறகும் சுவாதி திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று கூறி வந்ததால் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சுவாதியும் அவரது தம்பி சரவணகுமாரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் அக்கா என்றும் பாராமல் அரிவாளை எடுத்து தாக்கி சுவாதியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக கேணிக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுவாதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சரவணகுமாரை தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.