பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டைவிளை பகுதியில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள நர்சரி கார்டனில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாந்தா கார்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செடியின் விலையை கேட்பது போல் சாந்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாந்தாவிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது கேரள மாநிலத்தை சேர்ந்த அபி, ஆகாஷ் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.