மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,
“AIIMS மருத்துவக்குழு மற்றும் டாக்டர்.ரிச்சர்ட் பீலே குழுவை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்து வருகிறது. எக்மோ கருவியை இணைத்துள்ளோம். இதனால் செயலிழந்த இதயம் செயல்படக்கூடும்” என என்னிடம் அங்கிருந்த மருத்துவர்கள் கூறினர். இதனால் அக்கா எப்படியும் பிழைத்து விடுவார், அதிசயம் நடக்கும், நம்பிக்கையோடு சிகிச்சை அளியுங்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். அதன்படி அக்காவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அக்கா ஜெயலலிதா எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என நான் நம்பி இருந்தேன். எனினும் அவர் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இறுதியாக 05/12/2016 அன்று இரவு வேளையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கு மேலும் ஜெயலலிதாவின் உடலில் முன்னேற்றம் ஏற்படாது என்ற அதிர்ச்சி செய்தியை அங்கிருந்த மருத்துவர்கள் என்னிடம் தயங்கி தயங்கி தெரிவித்தனர். அதன்பின் அக்கா இறந்த தகவலை கேட்ட உடனே நான் கதறி அழுது மீண்டும் மயக்கமானேன். அதனைத் தொடர்ந்து அக்கா ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கு மற்றும் சம்பிரதாய ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்ய தொடங்கினர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.