இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்ததால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையில் ஆன விமான சேவைகள் 2 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று குறைந்ததையடுத்து குறைந்த அளவிலேயே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சிங்கப்பூர் விமான நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 30-ம் தேதி முதல் முழு அளவிலான விமான சேவைகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் பழையபடி விமான சேவைகள் அனைத்தும் இயங்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் தற்போது கொச்சிக்கு வாரத்திற்கு 7 விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 10 ஆக அதிகரிக்கப்படும் என்றும், சென்னைக்கு வாரத்திற்கு 10 முறை இயங்கும் விமான சேவைகள் 17 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.