ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய வகைசெய்யும் அக்னி பாத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. ராணுவத்திற்கு வழக்கமாக தற்போதுள்ள நடைமுறையின்படி ஆட்களை எடுக்காமல் நான்கு வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வகை செய்யும் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக வடமாநில இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கொதித்தெழுந்து இருக்கின்றனர்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்திரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் முதல் இலக்காக ரயில்களே இருக்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களில் அக்னி பாத்க்கு எதிராக நிகழ்ந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதம் அடைந்திருப்பதாக கிழக்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பீகாரில் மட்டும் 60 பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. 11 எஞ்சின்கள் எரிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மாவட்டங்களில் ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளது என்பது தெரியவந்திருக்கிறது. பீகாரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 700 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகள் மூலமாக மேலும் போராட்டக்காரர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.