Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அக்.,23…. மறக்க முடியாத நாள்…. “எப்போதும் மனதில் இருக்கும்”…. ட்விட் போட்டு நெகிழ்ந்த கோலி..!!

இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளகோலி, ‘அக் 23 என் மனதில் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்தாலும் ஒரே ஆறுதலாக விராட் கோலி இந்த தொடரில் 4 அரை சதங்களுடன் 296 ரன்கள் எடுத்து 2022 டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்த தொடரில்  சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் துவக்க வீரர்கள் சொதப்ப, 6.1 ஓவரில் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது..

அப்போது ஹர்திக் பாண்டியா – விராட் கோலி இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இதில் குறிப்பாக விராட் கோலி அபாரமாக ஆடி கடைசி வரை போட்டியை எடுத்துச் சென்று அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 82* ரன்கள் எடுத்திருந்தார்.

நீண்ட காலமாக  பேட்டிங்கில் தடுமாறிய விராட் கோலி ஆசியக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்து பார்முக்கு வந்தார்.. அதனை அப்படியே உலககோப்பையிலும் நிகழ்த்தி காட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமான இன்னிங்ஸ் ஆடிய விராட் கோலியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே திரும்பிப் பார்த்தது. கோலி ரசிகர்கள் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர்.. விராட் கோலியின் மிகச் சிறந்த மறக்க முடியாத ஆட்டம் என்று சொன்னால் அது இந்த போட்டி தான்.  விராட் கோலியின் இந்த ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது பெவிலியன் நோக்கி செல்லும் புகைப்படத்தைப் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்  “அக்டோபர் 23, 2022 என் இதயத்தில் எப்போதும் சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். இதற்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் இது போன்ற ஒரு ஆற்றலை உணர்ந்ததில்லை. என்ன ஒரு பாக்கியமான மாலை அது.”  என்று குறிப்பிட்டுள்ளார்..

Categories

Tech |