குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7, 11, 12, 13, 14ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்யலாம். ஆனால் தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் என எந்த பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை.
எனவே கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு எந்த வழியாக வர வேண்டும், அவர்களை எவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பக்தர்கள் வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கோவில் பகுதிக்கு வருகை தர அனுமதி இல்லை. பக்தர்கள் தங்கள் ஊர்களிலேயே காப்பு அணிந்து வேடமிட்டு விரத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் போலீசார் மூலம் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக கூடாரங்களில் சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டு அங்கிருந்து கோவிலுக்கு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது