பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வரும் பரிசு தொகுப்பை வட இந்தியாவில் கொள்முதல் செய்தது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொங்கல் பரிசு பொருட்கள் வட இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்டது ஏன்? என்று பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பொருட்கள் அனைத்தும் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜக கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழகத்தில் தயாரிப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்த திமுக அரசு, பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்களில் பெரும்பாலானவற்றை தமிழகத்தில் வாங்காமல் குஜராத் உள்ளிட்ட வெளிமாநில நிறுவனங்களிடத்தில் வாங்குவதன் காரணம் என்ன? உப்பை மட்டும் தமிழக நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதன் நோக்கம் என்ன? அவை அனைத்திலும் ஹிந்தியில் எழுதப்பட்டிருக்கிறதே? அது உங்களுக்கு பரவா இல்லையா…? ஒரு வேளை, திமுகவினர் வட மாநிலங்களில் வர்த்தகம் செய்கிறார்களோ? அல்லது அங்கேதான் விலை குறைவாக கெடச்சுச்சா.? ஏன்? தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ’’ என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அவர் மேலும், சென்ற வருடம் பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டிய திமுக, இந்த வருடம் அதே நிறுவனங்களிடம் கொள்முதல் செய்துள்ளதா? அப்படி செய்திருந்தால் எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்ன குற்றச்சாட்டு தவறு என்று ஒப்பு கொள்கிறதா? அது சரியென்றால் இப்போது ஊழல் நடந்துள்ளது என ஒத்துக் கொள்கிறதா.? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பொங்கல் பையுடன் வழங்கப்படும் 21 பொருட்கள் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன? கடந்த வருடம் என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது? என அறிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.