ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குனர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறபட்டுள்ளதாவது, நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி 6 மாதம் தொடங்கி 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக வழங்கப்படும் சத்துமாவு மற்றும் மகப்பேறு காலத்திற்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு போன்றவற்றில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2 வயது தொடங்கி 6 வயது வரையுள்ள ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்து மாவு மட்டுமல்லாமல் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்க வேண்டும் எனவும் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக முட்டைகள் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை பரிசீலித்த அரசு நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி, குழந்தைகளுக்கான சத்து மாவில் சேர்க்க வேண்டிய உணவு மாற்றங்கள் மற்றும் தாய்மார்களுக்கு தயாரிக்கப்படும் சத்துமாவில் சேர்க்கப்படும் உணவு வகைகளில் மாற்றம் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த உணவு வகைகளை டெண்டர் மூலமாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைத்திட்ட இயக்குனர் பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அந்த உணவுகளை குழந்தைகள் சரியாக சாப்பிடுகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை 25 செறிவூட்டப்பட்ட உணவு உற்பத்திக்கான பெண்கள் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், எந்தெந்த வயது குழந்தைகளுக்கு எவ்வளவு அளவில் சத்து சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் அரசு தெரிவித்துள்ளது.