முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை செய்ததற்கு பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜேந்திரபாலாஜியை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் ஒரு காரில் இருந்து மற்றொரு காருக்கு மாறி செல்லும்போது மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் விருதுநகர் மாவட்ட குற்றவியல் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து அவர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாட்கள் மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவருடைய வக்கீல்கள் ஆன ஆனந்த் குமார் மற்றும் மாரிஸ் குமார் இருவரும் ராஜேந்திரபாலாஜி ஆதரவாக வாதாடினர்.
பின்னர் அவர்களிருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அந்த பேட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கூட வழக்கு பதியப்பட்டுள்ளது அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்..? என கேள்வி எழுப்பினார். மேலும் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்லதம்பி எங்கு உள்ளார்…?எனவும் கேள்வி எழுப்பினர். ராஜேந்திர பாலாஜி தேடி வந்தபோது போலீசார் அவரது வழக்கறிஞர்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு பார்கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில், அவர் கூறியுள்ளதாவது, “முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மாரிஸ் குமார் இல்லத்திற்குள் எந்த வித முன் அனுமதியும் பெறாமல் நுழைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதாகவும், இதற்கு கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இது தொடர்பாக அறிக்கையும் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞராக தங்களது பணியை செய்யும் வழக்கறிஞரின் இல்லத்தில் முன் அனுமதி பெறாமல் சோதனை நடத்துவது சட்டத்தை மீறிய செயல் என பார் கவுன்சில் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே வழக்கறிஞர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென உத்தரவிடுமாறு டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.