ஊராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அய்யனார் நகரில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகில் பெரிய குளம் ஒன்று அமைந்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இந்த குளம் நிரம்பியது. ஆனால் குளத்திலிருந்து நீர் கசிவு ஏற்பட்டு அய்யனார் நகர் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் தேங்கி நின்றதால் துர்நாற்றம், கொசு தொல்லை போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வேடசந்தூர்- பழனி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி தலைவர் ராஜம்மாள் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.