சமூக நலன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒபவ்வா தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது , ” சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதியில் தங்கி படிக்கும் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் பதவியேற்ற 6 மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை செய்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 44 ஆயிரம் என்சிசி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
அவர்களுக்கு ராணுவத்திற்கு இணையான பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். கர்நாடகாவில் 12 ஆயிரம் போலீஸ் பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தற்காப்பு கலை சொல்லித் தரப்படும். சிலர் பெண்களை பார்க்கும் பார்வை மிகவும் மோசமானதாக உள்ளது. இதனால் பல பெண்கள் கொல்லப்படுகின்றனர் இதனை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்படும் அதோடு பெண்களுக்கு தற்காப்பு கலையும் கற்று தரப்படும்.!” இவ்வாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.