ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை ஒரு இளம்பெண் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் என்ற மாவட்டத்தை அடுத்த மாய வந்துனி தாடு என்ற பகுதியை சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரின் மனைவி கோமளி. இவர் கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருந்த காரணத்தினால் மருத்துவர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் இன்குபேட்டரில் சிகிச்சை பெற்று இருந்த குழந்தை திடீரென்று காணாமல் போனது.
அதிகாலை நேரம் என்பதால் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் செவிலியர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம பெண் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பர்தா அணிந்த ஒரு பெண் குழந்தையை எடுத்துச் சென்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. பின்னர் வழக்கு பதிவு செய்து குழந்தையை எடுத்துச் சென்றது யார்? என்பதை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.