அசாம் மாநிலம் குவஹாத்தியில் கொரோனா அறிகுறி இருந்ததால் மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட அசாம் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான டாக்டர் உத்பால் பர்மன் – குவாஹாத்தியைச் சேர்ந்த பிரதிக்ஷா மருத்துவமனையின் மூத்த மயக்க மருந்து நிபுணர் ஆவார். இவர் இதய சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை குவஹாத்தி நரம்பியல் ஆராய்ச்சி மையத்தில் (ஜி.என்.ஆர்.சி) அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
நாட்டில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் எனும் மலேரியா எதிர்ப்பு மருந்தை சக மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அசாம் மருத்துவர் உயிரிழந்தது மலேரியா தடுப்பு மருந்து தான் காரணமா என்பது தெரியவில்லை. மலேரியா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட பிறகு வாட்ஸ்ஆப் மூலம் தனது நண்பருக்கு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவர் மாரடைப்பில் உயிரிழந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு தான் காரணமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அசாம் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் நோய் தோற்று பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.