ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று காரணமாக ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் சனிக்கிழமை முதல் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது சில மாத கால இடைவேளைக்கு பிறகு ஜனவரியில் கொரோனா வழக்குகள் திடீரென அதிகரித்த பிறகு, இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜம்மு காஷ்மீரில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் அருண் குமார் மேத்தா தலைமையிலான மாநிலச் செயற்குழு வெளியிட்டுள்ள உத்தரவின் படி, ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 20 மாவட்டங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
அதனால் வார இறுதி நாட்களில் மக்களின் அத்தியாவசியமற்ற இயக்கங்களுக்கு அரசு முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று ஒரு நாளில் அதிகபட்சமாக 2,456 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதனுடன் 5 கோவிட் இறப்புகளும் பதிவாகியுள்ளன. மேலும் கொரோனா வழக்குகளின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் விடுமுறைகள் மற்றும் மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.