நித்தம் ஒரு வானம் திரைப்படம் குறித்து இயக்குனர் ஆர்.கார்த்திக் பேசியுள்ளார்.
அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குனர் ஆர்.கார்த்திக் கூறியுள்ளதாவது, நித்தம் ஒரு வானம் நிச்சயம் நல்ல உணர்வை தரக்கூடிய திரைப்படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலப்பரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்து இருக்கின்றோம். இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் நித்தம் ஒரு வானம் இருக்கும்.
படத்தில் நிறைய பாசிட்டிவான விஷயங்களை சேர்த்து இருக்கின்றோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாக அல்லது மன அழுத்தமாக இருக்கின்றோமோ அப்பொழுது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் பொழுது புத்துணர்ச்சியுடன் புன்னகையோடு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார்.