நாடு முழுவதும் கொரோனா 3ஆம் அலை தாக்கமானது பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மீண்டும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா தினசரி பாதிப்பானது பல ஆயிரங்களை கடந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,989 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு முடக்கம் ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஊரடங்கு காலங்களில் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனை போன்றவற்றுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இத்தகைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் கடந்திருக்கும் நிலையில் தினசரி நோய் தொற்று பாதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் அறியப்படவில்லை. அந்த அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் தங்களது தொழில்களுக்கு செல்ல இருப்பதால் தமிழகத்தில் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதை தவிர இரவு நேர ஊரடங்கில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் இருப்பதை கண்காணித்த அரசு, பேருந்து போக்குவரத்து சேவையை நிறுத்த வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கை சனிக்கிழமைகளிலும் செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், ஊரடங்கு குறித்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.