திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி மோதியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிரியம்பட்டியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்தார். இவரும், அதே பகுதியில் வசித்து வரும் திருமலைசாமி என்பவரது மனைவி விஜயாவும் விட்டல்நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை ஒன்றில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் 2 பேரும் கிரியம்பட்டியில் இருந்து நூற்பாலைக்கு நடந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் விஜயாவும், அலமேலுவும் கிரியம்பட்டியிலிருந்து வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தனர். திண்டுக்கல்-வேடசந்தூர் நான்குவழி சாலை ஓரத்தில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சேலம் நோக்கி மதுரையிலிருந்து மளிகை பொருட்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக விஜயா, அலமேலு மீது வேகமாக மோதியது. அதில் அலமேலு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஜயா உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் விஜயாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே விஜயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிவகங்கையை சேர்ந்த முனீஸ்வரன் (34) என்பவர் தான் லாரியை ஓட்டி வந்தது என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த விசாரணையில் லேசாக கண் அசந்து தூங்கி விட்டதால் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது