ஆஸ்திரேலியாவில் மதுபோதையில் தன் மகள் காரில் சிக்கியது கூட தெரியாமல் தாயொருவர் வேகமாக கார் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த பெண் டெல் பல்மர் (வயது 58). இவர் கணவர் வாரன் பல்மர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் கெலி பெனித் (27). மதுக்குடிக்கும் பழக்கமுடைய டெல் பல்மரை அவரது மகள்கள் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மே 2 ம் தேதி மாலை மதுபான விருந்தில் பங்கேற்ற டெல் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது அவரது மற்றொரு மகள் தாயை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த டெல் வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். அப்போது வீட்டின் முன் நின்றிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த கார் முன் தனது மற்றொரு மகள் கெலி பெனித் நின்று கொண்டு இருப்பதை கவனிக்காமல் காரை வேகமாக ஓட்டியதால் கெலி பெனித் காரின் டயரில் சிக்கிக் கொண்டுள்ளார். காரின் முன்பகுதிக்கும் டயருக்கும் இடையே அவர் சிக்கிக் கொண்டுள்ளார். இதனால் உடனடியாக காரை நிறுத்தும் படி கெலி பெனித் கத்தியுள்ளார். ஆனால் மது போதையில் இருந்ததால் அவரது தாய் காதில் கேட்கவில்லை.
மகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் கத்தியதில் இறுதியாக டெல் காரை நிறுத்தியுள்ளார். ஆனால் காரின் டயரில் சிக்கிய கெலி பெனித் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் பல மாத சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தற்போது சீரடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து மகள் காருக்கு அடியில் இருப்பது கூட தெரியாமல் ஓட்டிச் சென்ற தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் அன்று நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக மது போதையில் கார் ஓட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு அடுத்த மாதம் 26 ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு அறிக்கப்படும் என அறிவித்துள்ளது.