குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீலஷ் உனட்கட் என்ற மாணவன், அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவனுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் அந்த டியூஷன் ஆசிரியர், சிறிய தேர்வு ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது தேர்வு தொடங்கும் முன் வெளியே சென்ற மாணவன் நீலஷ், நீண்ட நேரம் கழித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த அந்த டியூசன் ஆசிரியர், அம்மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அந்த மாணவன், இயற்கை உபாதையை கழிப்பதற்காக வெளியே சென்றதாக கூறியுள்ளான். ஆனாலும் ஆசிரியர் தொடர்ந்து அடிப்பதை நிறுத்தாமல் கடுமையான முறையில் அவனை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த மாணவன், தனது பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர்கள், இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த மாணவனை தாக்கிய டியூஷன் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.