சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது தாயின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை சிலர் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் செல்போன் அழைப்பிற்கு வந்த எண்ணை வைத்து விசாரித்த போது எதிர் தரப்பில் பேசிய மர்ம நபர்கள் முண்ணுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனிடையே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை மலையம்பாக்கம் அருகே தனியாக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை போலீசார் விசாரித்த போது ஆட்டோவில் வந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய நிலையில் இங்கு இறக்கி விட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தபோது கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் அவருடன் வந்த இரண்டு தோழிகள் மற்றும் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இறங்கி வந்து டீக்கடையில் ஜாலியாக டீ குடித்துள்ளனர்.
அதன் பின் தோழியின் செல்போனை வாங்கிக் கொண்டு அந்த இளம் பெண் தனியாக சென்று பேசுவதும் அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஏறி செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து “அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதற்காக அதிக பணம் தேவைப்பட்டதால் சூது கவ்வும் சினிமா பட பாணியில் திட்டமிட்டு கடத்தல் நாடகம் ஆடி தாயிடம் பணம் பறிக்க முயற்சி செய்ததை” கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த இளம் பெண் மற்றும் அவரது நண்பர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.