பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் அமைந்துள்ள கண்டக் ஆற்றில் ரூ.13.43 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த பாலம் கட்டப்பட்ட சில வருடங்களிலேயே அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் அணுகு சாலை இல்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து பல்லியா எஸ்.டி.ஓ ரோஹித் குமார் வீரேந்திரா மற்றும் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனிடையே லோக் ஜன சக்தி கட்சி தலைவர் சஞ்சய் குமார் யாதவ் பாலம் கட்டுவதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இதில் பல அதிகாரிகள் பெரும் தொகையை சம்பாதித்து இருக்கின்றனர். இதற்கு உதாரணமாக பாலம் திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்பே இடிந்து விழுந்ததை கூறலாம். அதனால் பாலம் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.