சேலத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 30 )-சரண்யா ( வயது 26 ) தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்த லட்சுமணன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பணியாரமும் வாங்கி வந்திருக்கிறார். அந்த பணியாரம் ருசியாக இல்லை என்று மனைவி சரண்யா குறை கூறியுள்ளார். இதனால் மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த லட்சுமணன் சரண்யாவை தாக்கியிருக்கிறார்.
இதனால் பலத்த காயமடைந்த சரண்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் லட்சுமணன் சாதுர்யமாக ஈரோட்டில் உள்ள மனைவியின் தம்பி நந்தகுமாருக்கு ஃபோன் செய்து உனது அக்கா திடீரென இறந்துவிட்டார் எனக் கூறியிருக்கிறார். இதனால் பதற்றமடைந்த நந்தகுமார் சரண்யாவின் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அவர் சடலமாக கிடந்திருக்கிறார்.
மேலும் சரண்யாவின் நெற்றியில் காயமும், கை மற்றும் கால்களில் ரத்தமும் இருந்ததால் சந்தேகமடைந்த நந்தகுமார் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் லட்சுமணன் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து சரண்யாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மனைவி சரண்யாவுடனான சண்டையின் போது அவரை அடித்து கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாக லட்சுமணன் குற்றத்தை ஒப்புக்கொண்டிருகிறார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.