சேலம் மாநகராட்சி பகுதிகளில் இப்போது சாலைகள் போடும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலைகள் அனைத்தும் தார்சாலைகளாக மாற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாநகராட்சி 28வது கோட்டத்துக்கு உட்பட்ட அப்புசாமி தெருவில் பல்வேறு வருடங்களாக பழுதடைந்த நிலையில் இருந்த சாலையை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் அனைத்து பகுதிகளும் தார் சாலைகளாக மாற்றப்பட்டது. இந்நிலையில் சாலை ஓரத்தில் பல்வேறு வருடங்களாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து நிலையில் இருந்த ஆழ்துளை போர்வெல் ஒன்று இருந்தது.
இதற்கிடையில் தார்சாலை போட்ட ஒப்பந்ததாரர்கள் இந்த போர்வெல் பம்பை அகற்றாமல், தார் சாலையை போட்டிருக்கின்றனர். ஒப்பந்ததாரர்களின் இந்த நடவடிக்கை செவ்வாய்பேட்டை பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பான தகவல் காட்டுதீ போல் பரவியதை அடுத்து ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட போர் வெல்லை அகற்றி, அதன் மீது மண்ணைக்கொண்டு மூடியுள்ளனர். ஒப்பந்ததாரரின் இந்த நடவடிக்கையானது பரபரப்பபை ஏற்படுத்தி இருக்கிறது. முன்பே வேலூர் மாவட்டத்தில் போர் வெல்லை அகற்றாமல் சாலை போட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.