நைஜர் நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்கள் மற்றும் அரசு படையினர் மீது இந்த பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நைஜர் நாட்டில் “பண்டிட்ஸ்” என்ற ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டிரக், பஸ் உள்ளிட்ட சில வாகனங்கள் புர்கினா, மாலி, நைஜர் உள்ளிட்ட 3 நாட்டு எல்லைகளின் மையத்திலுள்ள தில்லாபெரி மாகாணத்தின் எல்லைப்பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தன. இந்த வாகனங்களில் 25-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதையடுத்து பஸ், டிரக் பெட்டல்கொலி என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக பைக்கில் வந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அந்த வாகனங்களை வழிமறித்துள்ளது. பின்னர் அந்த கும்பல் பஸ், டிரக்-ல் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தில் டிரக், பஸ்ஸில் இருந்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே 7 பேர் இந்த தாக்குதலில் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையே நைஜர் அரசு இந்த தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் அல்லது போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.