புதுச்சேரி மூலக்குளம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த ரமணி மற்றும் அவருடைய மனைவி சித்ரா இருவரும் தங்களது வீட்டில் மிஸ்டர், லெனி என பெயரிடப்பட்ட 2 வெளி நாட்டு நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்களை இரவு நேரத்தில் கட்டிப்போடாமல் அப்படியே விட்டுவிடுவார்களாம். இதனால் இந்த நாய்கள் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றிச் சுற்றி கண்காணித்து வருமாம். இந்நிலையில் திடீரென மிஸ்டர் என்ற நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நாயை மருத்துவரிடம் அழைத்துச் சென்றும் சோர்வுடனே இருந்துள்ளது. எதனால் நாய் சோர்வுடன் இருக்கிறது என்று தெரியாமல் கணவன், மனைவி இருவரும் வருத்தத்துடன் இருந்துள்ளனர். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றபோது கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று செத்துக் கிடந்ததைப் பார்த்து சித்ரா அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன்பிறகு தான் வீட்டிற்குள் புகுந்த பாம்பை நாய் கடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதனால் தான் நாய்க்கு விஷம் ஏறி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் நாயை மருத்துவரிடம் கூட்டி சென்றனர். தற்போது நாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் புகுந்த பாம்பை நாய் கொன்று உரிமையாளர்களைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.