இந்தியா உட்பட உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு பத்திரிக்கையாளர்கள் ஆகியோரது தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் ஒட்டு கேட்டுள்ளதாக அண்மையில் சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து பல நாடுகளும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகள் பெகாசஸை வாங்கியது குறித்தும், அந்த நாடுகள் எப்படி பெகாசஸை பயன்படுத்தியது ? என்பது குறித்தும் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அந்தக் கட்டுரையில் இந்தியா 2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாசஸ் மென்பொருளை கடந்த 2017-ஆம் ஆண்டு வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி மோடி அரசு தேசத் துரோகம் செய்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதாவது இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, “நமது ஜனநாயகத்தின் முதன்மையான நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தலைவர்களை உளவு பார்ப்பதற்காக பெகாசஸ் மென் பொருளை மோடி அரசாங்கம் வாங்கியுள்ளது. இவ்வாறு போன்களை ஒட்டு கேட்டதன் மூலம் இராணுவம், ஆளுங்கட்சி, நீதித்துறை, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைவரையும் குறி வைத்துள்ளனர். இது தேசத்துரோகம். மோடி அரசு இதன் மூலம் தேச துரோகத்தை செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.