வாலிபரை தாக்கிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புறசாத்தான்குடி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான அரவிந்தன் என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கொள்ளக்கண்டம் கிராமத்தை சேர்ந்த பிரமிட் என்பவரும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சக்தியிடம் யார் முதலில் பெட்ரொல் போடுவது என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரமிட் மற்றும் அவரது நண்பர்கள் சக்தியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்து சக்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சக்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்தியை தாக்கிய பிரமிட், துளசிராமன், அஜித், சுஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.