ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை அந்த ஊரின் அருகில் உள்ள ஊரில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாயாருக்கும் பார்வை குறைபாடு உள்ளது. மாணவியின் வீட்டின் அருகே 21 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். அந்த வாலிபருக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கர்ப்பமாகியுள்ளார்.
இந்த தகவலை பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்த அந்த மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று மட்டும் தெரிவித்துள்ளார். பெற்றோரும் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் மாணவி கர்ப்பமாக இருப்பதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அந்த மாணவி கடந்த 20ஆம் தேதி வயிறுவலி வந்துள்ளது. பின்னர் என்ன செய்வது என்று யோசித்த மாணவி பிரசவம் பார்ப்பது எப்படி? என்று யூட்யூபில் தேடி பார்த்து, பின்னர் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டார்.
அதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு மாணவியே தொப்புள் கொடியை அறுத்து குழந்தையை வெளியில் எடுத்தார். பிரசவம் முடிந்து வீட்டில் வழக்கம் போல் அந்த மாணவி நடமாடி வந்துள்ளார். ஆனால் அடிக்கடி வீட்டின் மாடிக்கு செல்வதை கண்ட பெற்றோர் சந்தேகம் அடைந்துள்ளனர். பிறகு அங்கிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. பின்னர் பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாணவியிடம் இதுகுறித்து கேட்டபோது நடந்த அத்தனையும் கூறியுள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். யூடியூப் பார்த்து மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட சம்பவம் கேரளாவை அதிர வைத்துள்ளது.