ஒரு பெண் இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் இரண்டு வருடமாக கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. கூலித் தொழிலாளியான இவர் கணவனை இழந்த பெண் ஆவார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தனது வீட்டை இழந்துள்ளார். இதனால் அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் சில நாட்களுக்குப் முன்பு சமுதாய நலக் கூடத்தில் இருந்து அவர்களை வெளியேறியதாக தெரிகிறது. இதனால் செய்வதறியாது திகைத்த சுஜாதா அதே பகுதியில் அருகில் இருந்த அரசு பொது கழிப்பறையை வீடாக மாற்றி வசித்து வருகிறார். மலம் கழிக்கும் பகுதியை மட்டும் கடப்பா கற்களை கொண்டு மறைத்து வைத்துள்ளார். மேலும் அந்த அறையிலேயே சமையல் சாதன பொருட்கள் மற்றும் அடுப்பு போன்றவற்றையும் வைத்து உபயோகப்படுத்தி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.