கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பு செலுத்துகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசிக்கு பயந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி கிராம மக்கள் மது அருந்தி வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஒனகெரே என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறையினர் செல்கின்றனர். ஆனால் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் காலையிலேயே மது அருந்தி விடுகின்றனர்.
மது குடித்தால் தடுப்பூசி போட மாட்டார்கள் என்பதால் இந்த நூதன திட்டத்தை அவர்கள் தீட்டியுள்ளனர். அதன்படி தடுப்பூசி போடுவதற்கு சுகாதார ஊழியர்கள் செல்லும் முன்பே அவர்கள் மது அருந்துவதால் தினமும் ஏமாற்றத்துடன் சுகாதார ஊழியர்கள் திரும்பி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து மாவட்ட சுகாதாரத் துறையினரிடம் சுகாதார ஊழியர்கள் முறையிட்டுள்ளனர். சரியான விழிப்புணர்வு இல்லாமல் அக்கிராம மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.