உக்ரைன் நாட்டை சேர்ந்த விமான நிறுவனத்தில் இருந்து ஆன்டனோவ் ரக சரக்கு விமானம் ஒன்று செர்பியாவிலிருந்து புறப்பட்டு ஜோர்டான் நாட்டை நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில், விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு விமானி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தெஸ்ஸலோனிகி அல்லது கவலா விமான நிலையங்களில் ஏதேனும் ஒன்றில் விமானத்தை தரையிறக்க விமானிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் கவலா நகரை விமானி தேர்வு செய்துள்ளார்.
ஆனால், விமான நிலையத்திற்கு 40 கி.மீ. தொலைவிற்கு முன்பே விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இதனை கிரீஸ் நாட்டு விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை பகையோ நகர மேயர் பிலிப்போஸ் அனஸ்டஸ்சியாடிஸ் உறுதி செய்துள்ளார். நாங்கள் விமானம் வெடித்து சிதறிய சத்தத்தினை ஒரு சில நிமிடங்களுக்கு முன் கேட்டோம். சம்பவ இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் நாங்கள் இருந்தோம் என கூறியுள்ளார். இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விமானத்தில் என்ன சரக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன என்றும் தெரியவில்லை. இந்த விமானத்தில் எறிபந்து ஒன்று உருண்டோடியதுடன், புகை மண்டலம் ஏற்பட்டது என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதனால், விமானத்தில் வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருக்க கூடும் என கிரீஸ் நாட்டின் சில ஊடகங்களும், உள்ளூர்வாசிகளும் யூகங்களை தெரிவித்துள்ளனர்.