அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடல் வெள்ளப்பெருக்கால் முட்புதரில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூரில் இருக்கும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முதியவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முதியவர் செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்த துரைசாமி(70) என்பது தெரியவந்தது. கடந்த மாதம் துரைசாமி இறந்துவிட்டார்.
இதனால் உறவினர்கள் துரைசாமியின் கை, கால்களில் துணி கட்டி ஆற்றோரம் உள்ள சுடுகாட்டில் உடலை புதைத்தனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு உடல் மேலே வந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து துரைசாமியின் மகன் உதயகுமார் மீண்டும் முறைப்படி தனது தந்தையின் உடலை அடக்கம் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.