நேற்று திமுக கூட்டணி கட்சியினரின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தோழமை கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் திமுக மீதும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் அந்த கூட்டமே பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் எங்களுக்கு எதிராக சுயேட்சையாக நிற்கிறார்கள் என்று கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும் திமுக தலைமை இதனை கண்டுகொள்ளவே இல்லை என்றும் கூறினர்.
பிறகு அமைச்சர் எஸ்.ரகுபதி “மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பான்மை இருந்தும் அதிமுகவுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு போட்டுள்ளனர். இதனால் நான் பெரிய தர்ம சங்கடத்துக்கு ஆளானேன். எனவே இந்த முறையாவது கூட்டணி கட்சியினர் என்னை மீண்டும் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கி விடாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் கட்சியினர் “நாங்க மட்டுமில்ல அதிமுகவுக்கு திமுகவில் இருந்தும் ஒருவர் வாக்களித்துள்ளார். ஆனால் திமுக அதனை மட்டும் பொருட்படுத்தவே இல்லை” என்றனர். இதனால் திமுக, காங்கிரஸ் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அமைச்சர்கள் குறுக்கிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.