கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜனவரி 25ம் தேதி பணிக்கு சென்ற மகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து கடந்த ஞாயிறு அன்று காவல்துறையினர் பெண்ணை மீட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தும்கூரைச் சேர்ந்த தொழிலதிபரான தேவராஜ் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதன்பின் பெண்ணின் தங்கையும், தேவராஜூம் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இதன் காரணமாக தேவராஜின் செயல்களில் சந்தேகமடைந்த அவரது மனைவி அவரை விட்டு விலகியிருக்கிறார். இவ்வாறு தன் அக்கா தேவராஜிடம் இருந்து விலகியதை அடுத்து அவரது தங்கையும் தேவராஜுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் தன்னுடன் தொடர்ந்து பழகும் படியும், கல்யாணம் செய்துகொள்ளும்படியும் மனைவியின் தங்கையான மச்சினியை தேவராஜ் வற்புறுத்தியிருக்கிறார்.
இதனால் தேவராஜ் தொந்தரவில் இருந்து தப்பிக்க அவர் பெங்களூருவிலுள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்தான் மச்சினியை கடத்தும் செயலில் தேவராஜ் ஈடுபட்டுள்ளார். தற்போது தேவராஜையும், இவருடன் கடத்தலுக்கு உதவிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு ஆசை பட பாணியில் மனைவியின் தங்கையை கல்யாணம் செய்ய வற்புறுத்தி அவரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.