திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள குளிப்பாட்டி வன குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்விக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. அதில் ஆரம்ப பள்ளி செயல்பட்டு வந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு பள்ளி கட்டிடம் வலுவிழந்து வகுப்பறையில் உள்ளே கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது.
அது மட்டுமல்லாமல் சில இடங்களில் மேற்கூரை வலுவிழந்து சுவரில் விரிசல் ஏற்பட்டு காணப்படுவதால் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி ஆசிரியர்களும் பெற்றோரும் அருகில் உள்ள மலைவாழ் மக்கள் வீடு ஒன்றின் முன் பகுதியில் தனியாக கூடாரம் ஒன்றை அமைத்து வகுப்புகள் தினம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் 30 குழந்தைகள் கல்வி கற்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் இங்கு பணிபுரிந்து வரும் நிலையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.