பாகிஸ்தானில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருநங்கையின் பெயர் கின்சா. இவருக்கு 23 வயதாகிறது. இவர் நேற்று முன்தினம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்பொழுது அங்கு பைக்கில் வந்த ஹம்சா சலீம் என்ற நபர் கின்சா மீது ஆசிட் வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த திருநங்கையின் முகம் மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள சர்வீசஸ் மருத்துவமனையில் கின்சாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கின்சாவின் தோழி ஹினா, மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கின்சாவுடன் உறவை வைத்து கொள்ள ஹம்சா விரும்பியதாகவும் அதற்கு கின்சா மறுப்பு தெரிவித்ததால் ஹம்சா அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். மேலும் திருநங்கைகளை துன்புறுத்தும் கும்பலுக்கு ஹம்சா தலைவனாக இருக்கின்றான். கின்சாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றும் பஞ்சாப் முதல்வரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆசிட் தாக்குதல் நடத்திய ஹம்சாவையும் மேலும் 3 கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் கின்சாவை நேரில் சந்தித்த உள்துறை மந்திரி அதாவுல்லா தாரார், குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை பாராட்டியுள்ளார்.
இதனை அடுத்து திருநங்கைகளின் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர். இதில் 77 % பேர் உடல்ரீதியான தாக்குதல்களை அனுபவிக்கிறார்கள் என்றும் அன்றாட வாழ்க்கையில் பாரபட்சமான நடத்தையை எதிர்கொள்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் திருநங்கைகளை பிச்சை எடுக்கவும், போதைப்பொருள் பயன்படுத்தவும், தற்கொலை செய்ய தூண்டவும், மற்றும் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்துகிறது என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிட் வீசியதால் திருநங்கை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.