நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவருக்கு 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்தீஷ் (வயது3) மற்றும் நித்தின் (வயது 1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக்-கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கார்த்திக் தனது மூன்று வயது மகனுடன் கோவைக்கு குடிபெயர்ந்து, அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் கீதா தனது ஒரு வயது மகனுடன் வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கடந்த 14-ஆம் தேதி குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டதாக கூறி, உதகையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தையை கீதா சேர்த்துள்ளார்.
ஆனால் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து, அது ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஊட்டி நகர போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பின் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பிரேத பரிசோதனையின் முடிவில் குழந்தையின் வாயில், அளவுக்கு அதிகமான உணவை திணித்து மூச்சுத்திணற வைத்து மற்றும் அந்த உணவில் மதுபானம் கலந்து கொடுத்தது போன்றவற்றால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தொட்டிலை ஆட்டும் போது குழந்தையின் தலையை சுவரில் மோத வைத்து கொலை செய்ததும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கீதாவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வேறு சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதற்கு அவரின் குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியதாக கீதா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதை அடுத்து சந்தேக மரணம் என்று வழக்கை பதிவு செய்த நிலையில், கொலை வழக்காக மாற்றி உதகை காவல்துறையினர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.