நெல்லை வேப்பங்குளம் பகுதியில் வசித்து வரும் தாவித்ராஜா கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்தமகள் பியூலா சென்னையிலுள்ள தனியார் பல்கலையில் இளங்கலை உளவியல் 2ஆம் ஆண்டு படித்துவருகிறார். 2வது மகள் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். சென்ற 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இருந்து அணில் குஞ்சு ஒன்று, தாவித்ராஜா வீட்டிற்குள் விழுந்துள்ளது. இதை பார்த்த மூத்தமகள் பியூலா அணிலை பாதுகாத்து பராமரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து வீட்டில் ஒரு உறுப்பினராக மாறிய அந்த அணிலுக்கு சிட்டு என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்துள்ளார்.
முதலில் அணிலுக்கு வெள்ளைசாதம் வைத்து வளர்த்த நிலையில், பின் வீட்டிலுள்ள உறுப்பினர்கள் உண்ணும் உணவை அனைத்தும் அது சாப்பிட துவங்கியுள்ளது. மேலும் இளநீர், தேங்காய், தக்காளி, வறுத்த வெங்காயம், முந்திரிப்பருப்பு உள்ளிட்ட உணவுகளை விரும்பி சாப்பிட துவங்கியதால் அதையெல்லாம் அவர்கள் அணிலுக்கு வைத்துள்ளனர். இதனை தவிர்த்து அணில் வீட்டில் குழந்தைகளுக்கு வாங்கி வைத்துள்ள தின்பண்டங்களையும் தேடிச்சென்று சாப்பிட்டு கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டின் எப்பகுதியில் நின்றாலும் சிட்டு என அழைத்தால் உடனே அவர்களை தேடிவந்து பார்த்து அவர்கள் மீது நின்று கொள்கிறது.
இதனிடையில் தாவித்ராஜா வீட்டிலிருந்த பையில் அணில்குட்டி போட்டதை பார்த்த அவர்கள் அதை எடுக்க முயற்சித்தபோது அந்த அணில் அவர்களை தொடவிடாமல் செய்துள்ளது. இதனால் அவர்கள் அணிலுக்கென தனியாக அட்டைப் பெட்டியில் வீடுபோன்று அமைத்து வீட்டின் முகப்புபகுதியில் ஆங்காங்கே தொங்கவிட்டு இருக்கின்றனர். அதன்படி தேவையான உணவுகளை உட்கொண்டு குழந்தைகளுடன் விளையாடி நேரத்தை செலவழித்த பிறகு அணில் தானாகவே, அந்த பெட்டிக்குள் சென்று இருந்துகொள்கிறது.
8 குட்டிகள் வரை அணில் ஈன்றுள்ள நிலையில், அந்த அணில் குட்டிகளும் காலையில் வெளியே சென்று இரவுநேரத்தில் அந்த பெட்டிகளுக்குள்ளேயே வந்து தஞ்சம் புகுந்துகொள்கிறது. எனினும் சிட்டு என்ற பெயர் வைத்த அணில் அவர்களது வீட்டை சுற்றிசுற்றி இன்றும் வந்து கொண்டிருக்கிறது. அதனபின் கொரோனா காலக்கட்டம் முடிந்து தாவித்ராஜாவின் மகள் சென்னை பல்கலைக்கழகத்திற்கு படிக்கச் சென்றபோதிலும் அவரது தாய் மற்றும் சகோதரி அணிலை குழந்தைபோல் பராமரித்து வருகின்றனர். தற்போது வீட்டில் மகாராணிபோல அணில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இதை அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.