மத்தாப்பு, வெடிகுண்டு, சங்கு சக்கரம், லட்சுமி பட்டாசு, போன்ற பல்வேறு வடிவங்களில் சாக்லேட் தயாரித்து வருவதாக சாப்ட்வேர் என்ஜினீயர் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஆர்வி நகர் பகுதியில், சிவகுருநாதன் புவன சுந்தரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. சிவகுருநாதன் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார். புவனசுந்தரி குடும்பத்தை கவனித்து வந்த நிலையில், பொழுதுபோக்கிற்காக தன்னுடைய குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வீட்டிலேயே சாக்லேட் தயாரித்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து சாக்லேட்டை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும், வழங்கியுள்ளார். அதன் சுவை நன்றாக இருக்கவே தனது வீட்டிலேயே தயாரித்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். மேலும் சாக்லேட்டில் புதுமையாக செய்ய நினைத்த புவனசுந்தரி பட்டாசு வடிவில் சாக்லெட்டுகளை தயாரித்துள்ளார். சிறிது முதல் பெரிய வடிவிலான சாக்லேட்டுகளை தயார் செய்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். சாக்லேட்டுகளின் தரம் மற்றும் ருசி பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ளதால் சமூக வலைதளங்கள் மூலம் வெளியூர்களில் இருந்தும் சிலர் இதனை வாங்கிச் சென்றுள்ளனர்.
இவை ஒரு கிலோ ரூபாய் 450 முதல் 1800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றி புவணசுந்தரி கூறுகையில், சாக்லேட் என்றால் அனைத்து மக்களையும் கவரக்கூடிய உணவுப் பொருளாகும். கொடைக்கானலில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பது போன்று நாம் தயாரிக்கலாம் என்று ஆரம்பத்தில் தொடங்கினேன். அது அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தி உள்ளதா? என்பதை அறிவதற்கு இலவசமாக பொதுமக்களுக்கு ஆரம்பத்தில் கொடுத்தேன். அதை பலரும் வரவேற்றும், பாராட்டியும் வந்ததால் முழுமூச்சாக சாக்லேட் தயாரிப்பில் இறங்கினேன்.
திண்டுக்கல்லின் தட்பவெப்ப நிலைக்கேற்ப சாக்லேட்டுகளை வடிவமைத்து அதை பத்திரப்படுத்தி வைக்க பிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் வகையில் ராக்கெட், கம்பி மத்தாப்பு, வெடிகுண்டு, சங்கு சக்கரம், லட்சுமி பட்டாசு, புஸ்வானம் போன்ற பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். வீட்டிலிருக்கும் பெண்கள் தங்களது தொழிலில் ஏதேனும் ஒரு புதுமையை செய்தால் யாரும் சாதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.