தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சார்பாக பிரசார வாகன தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச கிரையான் பென்சில், கணித உபகரணப்பெட்டி மிதிவண்டி, பெண் குழந்தைகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் விலையில்லா நோட்டு, புத்தகங்கள், மடிக்கணினி புத்தகப்பை, சீருடை, காலணிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளை மேம்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு சிறந்த முறையில் செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு பயன் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.