தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 1ஆம்தேதியிலிருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு 1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பதனால் அவர்களுக்கு பெரும் மன அழுத்தமும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியும், இழப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து தமிழக முதல்வர் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடு செய்யவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது, 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் மாஸ்க் போட்டு கொண்டு வெகு நேரம் குழந்தைகளால் இருக்க முடியவில்லை என்றால் குழந்தைகளுடைய பெற்றோர் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.