அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீட்டு வங்கி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனம் தனது சீனியர் ஊழியர்களுக்கு அளவில்லா விடுமுறைகளை வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ப்ரைஸ் அறிவிப்பாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்களில் இருந்து எக்கச்சக்கமான ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஊழியர்கள் ராஜினாமா செய்வதை தடுக்கும் வகையில், திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் நிறுவனங்கள் சம்பள உயர்வு,போனஸ் மற்றும் விடுமுறை என பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி தற்போது கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனம் தனது சீனியர் ஊழியர்கள் அனைவருக்கும் அளவில்லா விடுமுறை வழங்க திட்டமிட்டுள்ளது. இருந்தாலும் ஜூனியர் ஊழியர்களுக்கான விடுமுறைக்கு வரம்பு உள்ளது.
ஜூனியர் ஊழியர்கள் வருடத்திற்கு இரண்டு நாட்களாவது கூடுதல் விடுமுறை வழங்கப்படும். 2023 ஆம் ஆண்டு முதல் அனைத்து ஊழியர்களும் வருடத்திற்கு மூன்று வாரங்கள் விடுமுறை எடுக்க வேண்டுமென இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக மூன்று வாரங்களில் ஏதாவது ஒரு வாரம் இடைவிடாமல் முழு வாரமும் அதாவது ஏழு நாட்கள் தொடர்ந்து விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊழியர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்ட இந்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.