ரசிகன் ஒரு ரசிகை என்ற திரைப்படம் வெளியாகி சரியாக நேற்றுடன் 36 வருடங்கள் நிறைவு செய்துள்ளது.
இயக்குனர் பாலு ஆனந்த் இன்டீரியர் டெக்கரேஷன் படித்த இவர், கன்னட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக ஆர்.சுந்தர்ராஜனிடம் பணியாற்றியுள்ளார். இவரது முதல் திரைப்படம் விஜயகாந்த் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’. இவரின் சொந்த ஊர் கோயம்புத்தூர். இவரும் சத்யராஜும் நல்ல நண்பர்கள். இவரது இயக்கத்தில் வெளியான படம் ‘ரசிகன் ஒரு ரசிகை’. இது சரியாக 36 வருடங்களுக்கு முன்பு பாலு ஆனந்த் இயக்கத்தில் வெளியானது.
இதனை அடுத்து ரசிகன் ஒரு ரசிகை, கதையை பாலு ஆனந்த் சத்யராஜிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் வைதேகி காத்திருந்தாள் பட தயாரிப்பாளர்கள் படம் எடுக்குமாறு கேட்க தனது முதல் படமான நானே ராஜா நானே மந்திரி படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் மிகச் சிறந்த வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு பாலு ஆனந்த்தை வாசன் பிரதர்ஸ் அணுகி, தங்களுக்கு ஒரு படம் செய்ய கேட்டுள்ளனர். உடனே பாலு ஆனந்த், ரசிகன் ஒரு ரசிகை கதையைக் கூறியிருக்கிறார்.
இந்த கதை அவர்களுக்கு மிகவும் பிடித்த நிலையில், பட வேலையை உடனே ஆரம்பித்தனர். இந்தப் படம் இசையை பின்னணியாக கொண்ட திரைப்படம். இதில் அம்பிகா பாடகியாக வருகிறார். ரசிகன் ஒரு ரசிகை படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது. அதிலும் முக்கியமாக ஏழிசை கீதமே பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
நடிகர் சத்யராஜ் ரசிகன் ஒரு ரசிகை படத்திற்கு முன்பு வரை எதிர்மறை கதாபாத்திரத்தில், அதாவது வில்லனாக நடித்து வந்த நிலையில் இந்த படத்தில் தான் முதல் முறையாக நாயகனாகவும் அதுவும் நல்லவராகவும் நடித்தது ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றுத் தந்தது. இந்தத் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் நல்ல ஒரு லாபத்தை சம்பாதித்து தந்தது. மேலும் முப்பத்தி ஆறு வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் இன்றும் அனைவரும் கேட்டு ரசிக்கும்படியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.