சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னகுட்டையன்பட்டி பகுதியில் கீழ்சந்தி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயால் 130-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகிறது. அந்த கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சொக்கலிங்கபுரம், சின்னகுட்டியன்பட்டி, ஆலம்பட்டி, சுக்காம்பட்டி, வஞ்சி நகரம், துவரங்குறிச்சி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை போட்டி போட்டு பிடிக்க ஆரம்பித்தனர். இதில் கெண்டை, கெழுத்தி, கெண்டை பொடி, அயிரை, ஜிலேபி ஆகிய மீன்கள் பிடிபட்டது.
அதன்பின் அந்த மீன்களை அவரவர் வீட்டிற்கு கொண்டு சென்று சமையல் செய்து சாப்பிட்டனர். பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் இந்த திருவிழா ஏற்பாடுகளை பொருளாளர் அருள், செயலாளர் தினேஷ் பொன்னையா ஆகியோர் செய்திருந்தனர். இந்த மீன்பிடித் திருவிழா கொண்டாடுவதன் மூலம் மழை பெய்து செழிப்பாக கண்மாய் நிரம்பும் என்பது ஐதீகம். இந்த திருவிழா முடிந்த பின்பு அங்கு மாலையில் லேசான மழை பெய்துள்ளது.